தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா..? குடியரசுத்தலைவர் ஆட்சியா..?

Saturday, February 18th, 2017

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை (பெப்.18) காலை 11 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. 15 நாள்களுக்குள் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்குக் கூடும் என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கூவத்தூர் தனியார் நட்சத்தி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் மனது மாறுவதற்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இன்று சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார். இதையடுத்து இன்று 11 மணிக்கு சிறப்பு பேரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பேசுவார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தோற்றால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது. தனக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக எடப்படி பழனிசாமி கூறியிருந்தார்.

ஆனால், தற்போது கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர் அருண்குமார் எடப்பாடிக்கு ஆதரவாளிக்க விருப்பமில்லை என்றுக் கூறி தனது இல்லத்திற்கு சென்று விட்டார். இதையடுத்து எடப்பாடி ஆதரவு எண்ணிக்கை 122 குறைந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸூம் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து எடப்பாடி ஆதரவுக்கான எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனால், திமுகவுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். திமுக இந்த வாய்ப்பை நிராகரிக்கும் நிலையில் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை ஏற்படும். இதேபோல கடந்த 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக தலைவரும், திருவாரூர் எம்எல்ஏவுமான கருணாநிதி பங்கேற்கப் போவதில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

tnsec

Related posts: