வங்கக் கடலில்  “லோ”…!

Friday, May 13th, 2016
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கோடைமழையால் வெப்பம் தணிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனத்தால் கோடை மழை மேலும் 2 தினங்களுக்கு நீடிக்கும் என்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தேர்தல் நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு மாதங்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டிய நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பசலனத்தால் பரவலாக மழை பெய்து வருகிறது. இடியும் மின்னலுமாய் மழை கொட்டி வருவதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, முத்துநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, சிங்கப்புரம், வெள்ளாளகுண்டம், ஆகிய பகுதிகளில் பலத்த காற்று, மற்றும் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று 6 செ.மீ அளவு மழை பெய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மாலை, மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வரை இந்த கோடையில் வெப்பம் பதிவாகி உள்ள நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 98 டிகிரியாக பதிவானது. மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட சில பகுதிகளில் மாலை நேர வெப்ப சலனத்தால் மழை பெய்தது.
நேற்று பகலில் மந்தமான வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல பகுதிகளில் மேகம் திரண்டு மழை கொட்டத்தொடங்கியது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் கன மழை பெய்தது. கன மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
பல சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகராட்சி அருகே மரக்கிளைகள் ஒடிந்து விழுந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காய்ந்து கிடந்த வயல்களில் மழை நீர் ஆறாக பாய்ந்தது. நேற்று பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் கடந்த ஒன்றரை மாதமாக நீடித்த வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து 16ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் வானிலை மைய இயக்குனர் கூறியுள்ளார்.
சேலத்தில் நேற்று அதிகபட்சமாக 6 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வெப்ப சலனத்தால் மேலும் இருதினங்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறிய பாலச்சந்திரன், தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தேர்தல் நாள் அன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
சென்னை வானிலை ஆயவு மைய இயக்குநராக இருந்த ரமணன், வானிலை முன்னறிவிப்புகளுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் அவர் ஓய்வு பெற்றார். ரமணன் ஓய்விற்குப் பின்னர் வரும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: