கடலில் மிதக்கும் கப்பல் வெடிகுண்டு: வெளியான திடுக்கிடும் தகவல்!

Wednesday, July 31st, 2019

கடலில் மிதக்கும் வெடிகுண்டு என ஐக்கிய நாடுகள் மன்றம் குறிப்பிட்டுள்ள எண்ணெய் கப்பல் ஒன்று எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் தற்போது யேமன் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கப்பலை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு தொடர்புடைய நாடுகளில் இருந்து உறுதியான பதில் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.கப்பல் வெடித்துச் சிதறினால், அது உலகம் இதுவரை பார்த்திராத சுற்றுச்சூழல் பேரழிவாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கப்பலில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் கடலில் கலப்பதாக யேமன் அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் மன்றத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.கடலில் படர்ந்துள்ள எண்ணெய்க்கு தீ கொளுத்தப்பட்டால் அது சர்வதேச கப்பல் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும்.

குறித்த கப்பலை சோதனையிடும் முயற்சியை ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலமுறை தடுத்து நிறுத்தியுள்ளது, பிரச்னையை தற்போது பூதாகரமாக மாற்றியுள்ளது.யேமன் நாட்டின் முக்கிய துறைமுகமான ராஸ் ஈசா பகுதியில் இருந்து சுமார் 70 கி.மீற்றர் தொலைவில் தற்போது கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் கப்பல் இப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. யேமன் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலானது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.எண்ணெய் நிறுவனமானது பீப்பாய்களில் எண்ணெய் நிரப்பி, அதை குறித்த கப்பலில் நிரப்புவார்கள். அந்த கப்பலில் இருந்து ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கு பீப்பாய்கள் மாற்றப்படும்.

இந்த கப்பலில் மொத்தம் 34 டாங்கர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 30 லட்சம் பீப்பாய் எண்ணெய் சேமிக்க முடியும்.ஆனால் இந்த அளவுக்கு எண்ணெய் தற்போது இந்த கப்பலில் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் 14 லட்சம் பீப்பாய் அளவுக்கு எண்ணெய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஸ் ஈசா துறைமுகம் ஹூதிகளின் கைவசம் சிக்கியதுடன் 2015 ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்த கப்பலில் இருந்து எண்ணெய் பீப்பாய்களை வேறு கப்பலுக்கு கைமாறுவதும் ஸ்தம்பித்தது.தேவையான டீசல் கிடைக்காததால் கப்பலை வேறு பகுதிக்கு நகர்த்திச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தனியார் சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்றால் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளனர்.கப்பலில் தற்போதுள்ள சுமார் 544 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் இந்த விவகாரத்தில் முக்கிய தடையாக உள்ளது.

கப்பலில் தற்போதுள்ள எண்ணெய் பீப்பாய்களை விற்பனை செய்து கிட்டும் பணத்தில் தங்களுக்கும் ஒரு விகிதம் தர வேண்டும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால் அந்த பணத்தை அவர்கள் ஆயுதம் வாங்க பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் ஐ.நா மன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

Related posts: