வாழ்க்கை துணையின் வருமான ஆதாரத்தையும் அறிவிக்க வேண்டும்- தேர்தல் ஆணையம்!

Sunday, May 28th, 2017

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வாழ்க்கைத் துணையின் வருமான ஆதாரத்தை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

தேர்தல் விதி முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்தை கடந்த வருடம் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது.குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சட்ட அமைச்சகம் புதிய விதிமுறைகளை கடந்த மாதம் 17ஆம் திகதி அறிவிக்கையாக வெளியிட்டது. இதனையடுத்து, புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திருமணம் செய்தவராக இருந்தால் அவர் தனது வாழ்க்கை துணைக்கு கிடைக்கும் வருமானம் தொடர்பான ஆதாரத்தையும் பிரமாண பத்திரத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தற்போதுள்ள விதிமுறைகளின் பிரகாரம் வேட்பாளர் ஒருவர் தான், தனது வாழ்க்கை துணை, தன்னை சார்ந்துள்ள 3 பேரின் சொத்து மற்றும் கடன்கள் விவரங்களை தெரிவித்தால் போதுமானது என நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: