கைதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நீதிபதி!

Wednesday, August 23rd, 2017

அமெரிக்காவில் விசாரணைக்கு வந்த கைதி ஒருவர் தாக்குதலில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அவரை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓஹியோ மாகாணத்தில் உள்ள Steubenville நகர் நீதிமன்றத்தில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட Nathaniel Richmond என்ற கைதி நேற்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கைதி மீதான குற்றம், நீதிமன்றத்தில் நிகழ்ந்த விசாரணை தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே கைதி வந்துள்ளார். அப்போது, நீதிபதியான Joseph Bruzzese Jr என்பவரும் வெளியே வந்துள்ளார்.

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட்ட கைதி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் நீதிபதி நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

இத்தாக்குதலில் நீதிபதிக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது, நிலைமையை உணர்ந்த நீதிபதி தற்காப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கைதியை 5 முறை சுட்டுள்ளார்.

சில நிமிடங்கள் நீடித்த தாக்குதலில் கைதி நீதிமன்ற வளாகத்திலேயே பலியாகியுள்ளார், படுகாயம் அடைந்த நீதிபதி உடனடியாக ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போது நீதிபதி அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கைதியை அழைத்து வந்த வாகன ஓட்டுனரும் ஏற்கனவே சிறை தண்டனையை அனுபவித்துள்ளதால் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நீதிபதி மீது கைதி தாக்கியதற்கான காரணத்தை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஓஹியோ மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: