வடகொரியா எச்சரிக்கை: நடவடிக்கையில் அமெரிக்கா!

Friday, October 27th, 2017

வடகொரியா சிறு இடைவெளிக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனைக்கு தயாராவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் குறித்த அறிவிப்பு வெளியான உடன், எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசுபிக் பெருங்கடல் பகுதியில் இந்த அணு குண்டு சோதனை மேற்கொள்ள இருப்பதாக வடகொரிய உயரதிகாரி ஒருவர் தலைநகர் Pyongyang ல் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி தங்களது தலைவர் கிம் ஜோங் வுன் திட்டமிட்டபடி மிக விரைவில் இந்த சோதனையானது நடத்தப்படும் என அவர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கும் தகவல் அளித்துள்ளார்.மேலும் டிரம்ப் அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பது அந்த நாட்டு மக்களின் நலனுக்கு நன்மை தரும் எனக் கூறியுள்ள அவர், சமீப காலமாக தங்களின் ஜனாதிபதியை அமெரிக்கா துச்சமாக மதிப்பிட்டு ஏளனமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்றார்.

கடந்த மாதம் இதேபோன்று வடகொரிய வெளிவிவகாரத்துறை திடீரென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதை எவரும் கருத்தில் கொள்ளவில்லை.அதனையடுத்தே மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை வடகொரியா மேற்கொண்டது. ஆனால் தற்போது வெளியான அறிவிப்பால் வடகொரியாவின் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் என்ன நடவடிக்கையில் இறங்கும் என்பது இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தமது பயணத்தை துவங்க உள்ளார்.

வடகொரியா அரசியல் வரலாற்றில் இதுவரை 6 முறை அணுகுண்டு சோதனை மேற்கொண்டது. அதில் 3 முறை கடந்த 21 மாதங்களில் மேற்கொண்டுள்ளது.குறித்த 6 சோதனைகளும் வடகொரியாவின் ரகசிய தளத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடகொரியா மேற்கொள்ளவிருக்கும் 7-வது அணு குண்டு சோதனையானது பசுபிக் பெருங்கடலின் மீதே வளிமண்டலத்தில் என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 3 ஆம் திகதி தனது ஆறவது அணு குண்டு சோதனையை வடகொரியா மேற்கொண்டதில், தென் கொரியா பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என நிபுணர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: