ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி!

Monday, September 19th, 2016

ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது.

ரஷ்யா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு நேற்று (18) தேர்தல் நடைபெற்றது.  2011-ம் ஆண்டு புதினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சுதந்திரமான தேர்தல் இதுதான் என்ற நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைநகர் மாஸ்கோவில் புதின் வாக்களித்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் நேற்று 47.5 சதவீதம் வாக்குகளே பதிவாகின. குறிப்பாக, தலைநகர் மாஸ்கோவில் 20 சதவீதம் வாக்குகளும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 16.12 சதவீதம் வாக்குகளும் மட்டுமே பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு முடிந்ததும் எண்ணிக்கை தொடங்கி சுமார் 50 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜனாதிபதி விளாடினிர் புதின் சார்ந்திருக்கும் ஐக்கிய ரஷியா கட்சி 53 சதவீதம் வாக்குகளை பெற்று மொத்தம் உள்ள 450 தொகுதிகளில் 300 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்நாட்டின் வலதுசாரி இயக்கமான எல்.டி.பி.ஆர். 14.3 சதவீதம் வாக்குகளையும், ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி 14.2 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளன. மீதமுள்ள வாக்கு எண்ணிக்கையிலும் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி பெரும்பான்மையான வெற்றியை பெறும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி பிரதமர் டிமிட்ரி மெடடேவ் தலைமையிலான ஐக்கிய ரஷியா கட்சி 48.7 சதவீதம் வாக்குகளையும், ரஷிய கம்யூனிஸ்ட் கட்சி 16.3 சதவீதம் வாக்குகளையும், எல்.டி.பி.ஆர். கட்சி 14.2 சதவீதம் வாக்குகளையும் பெறும் என்பது தெரியவந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் தங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றிமுகத்தில் இருப்பது தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மாஸ்கோவில் உள்ள ஐக்கிய ரஷியா கட்சி அலுவலகத்துக்கு வந்த அஹ்டிபர் விளாடிமிர் புதின், பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோர் இந்த வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டும் என்று விரும்பிய மக்கள் தங்கள் கட்சிக்கு இந்த வெற்றியை பரிசாக அளித்துள்ளதாக தொண்டர்களிடையே பேசிய புதின் குறிப்பிட்டார்.

619493858Untitled-1

Related posts: