முதல்முறையாக ஐ.நா. சபையில் தீபாவளி!

Sunday, October 30th, 2016

ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஐ.நா.சபை மாளிகையில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்த புகைப்படத்துடன், ஐ.நா.விற்கான இந்திய தூதர் சையத் அக்பரூதீன் இச்செய்தியை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். இந்த தொடக்க முயற்சிக்கு ஐ.நா. பொது சபை தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றி கூறிஉள்ள சையத் அக்பரூதீன், ”மகிழ்ச்சியான தீபாவளி! ஐ.நா. சபை முதல் முறையாக தீபாவளி கொண்டாடுகிறது. ஐ.நா. சபை தலைவரின் முயற்சிக்கு நன்றி,” என்று மற்றொரு டுவிட் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

ஐ.நா. தலைமையக கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து அடங்கிய விளக்கு ஏற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். அக்டோபர் 31-ம் திகதி வரையில் இந்த அலங்காரத்தில் கட்டிடம் காட்சியளிக்கும்.

ஐ.நா. பொதுசபையில் “தீபாவளி முக்கியத்துவத்தை” ஒப்புக்கொள்ளும் விதமாக 2014-ம் ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஐ.நா.சபையில் முதல் முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டு உள்ளது. அதிகமான ஐ.நா. உறுப்பு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது என குறிப்பிட்டு, தீபாவளி நாளில் ஐ.நா. சபை கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என்று தீர்மானத்தில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மற்றும் கூட்டம் நடைபெறாத நாளாக அறிவிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கடந்த ஜூனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் சிறப்பு மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளித்தது. ஐ.நா.சபை கட்டிடத்தில் இந்தியர்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வாழ்த்து அடங்கிய காட்சியை பார்த்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நியூயார்க்கை சேர்ந்த இந்தியப்பெண் பூணம் பேசுகையில், “இதனை பார்ப்பதற்கு எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நான் என்னுடைய தாய்நாடான இந்தியாவில் இருப்பது போன்றே உணர்கின்றேன்,” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளார். இதுபோன்று பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

45

Related posts: