மீண்டும் காபூல் பிணக்குவியல்!

கடந்த 15 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டு ஒரு வாரத்தில், மற்றொரு குண்டுத் தாக்குதல், காபூலை நேற்று அதிரச் செய்தது. எனினும், தாக்குதலை மேற்கொண்ட தலிபான் ஆயுததாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
வெளிநாட்டவர்களுக்கான ஹொட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் அதிர்வுகளால், சில மைல்களுக்கு அப்பால் காணப்பட்ட ஜன்னல்களின் கண்ணாடிகளும்கூட நொறுங்கியிருந்தன. இந்தத் தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட அதிர்ச்சியைப் பயன்படுத்திய ஆயுததாரிகள், வழக்கமாகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும் அந்த ஹொட்டலுக்குள் நுழைந்தனர்.
எனினும், தொடர்ந்து நுழைந்த ஆப்கானிஸ்தானின் படைவீரர்கள், அங்கு நுழைந்திருந்த ஆயுததாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆயுததாரிகளில் மூவர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதல் முடிவுக்கு வந்தது. இதில், பொலிஸாரின் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
இந்தத் தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, தாக்குதலுக்கு உரிமை கோரிய தலிபான் குழு, அமெரிக்காவைச் சேர்ந்த “படையெடுப்பாளர்கள்” 100 பேர் உயிரிழந்துள்ளதாக அல்லது காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தது.
எனினும், தாக்குதல் முடிவடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த காபூலின் பொலிஸ் திணைக்களத் தலைவர் அப்துல் ரஹ்மான் ரஹிமி, “நடவடிக்கை முடிந்துள்ளது. பொலிஸ் அதிகாரியொருவர் தனது உயிரை இழந்ததோடு, மூவர் காயமடைந்தனர். ஆனால், ஹொட்டல் ஊழியர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.
Related posts:
|
|