மீண்டும் காட்டுத் தீ: அமெரிக்காவில் 8 பேர் சாவு!

Thursday, August 2nd, 2018

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 60 வீடுகளும் எரிந்து சாம்பலாயின.

கோடை வெப்பம் அதிகரித்துள்ள வடக்கு கலிபோர்னியாவில் அண்மை காலமாக காட்டுத் தீ ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சுமார் 290 கி.மீ. தொலைவில் உள்ள வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. அங்கு கடந்த வாரம் ஏற்கெனவே காட்டுத் தீ பரவியதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், அவற்றையும் மீறி தீ வேகமாகப் பரவியது.

ஹெலிகாப்டர்கள் மூலம் இரசாயனத்தை தூவி தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், புகை மூட்டமும், வெப்பமும் அதிகம் உள்ள இடங்களில் ஹெலிகாப்டரை செலுத்த முடியாமல் ராணுவ வீரர்கள் திணறினர். தீயில் சிக்கி இதுவரை 8 பேர் வரை இறந்துவிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வனப் பகுதியை ஒட்டி அமைந்திருந்த சுமார் 60 வீடுகளும் தீக்கிரையாகிவிட்டன.

சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு காட்டுத் தீ பரவியுள்ளது. வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு மாற்றப்பட்டதால் பெருமளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு புகை சூழ்ந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. அப்பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக தீயணைப்புப் படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: