ராம்குமாரை காப்பாற்ற முயன்ற சிறைக்காவலர் – பரபரப்பு தகவல்!

Monday, September 19th, 2016

ராம்குமார் நேற்று மின்சார வயரை கடித்து உடலில் மின்சாரத்தை பாய்ச்சி சுருண்டு விழுந்தபோது, அவருடன் 4 கைதிகளும் இருந்து உள்ளனர். சிறைக்காவலர் பேச்சிமுத்துவும் அங்கு காவல் பணியில் இருந்து உள்ளார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது –

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. மின்சாரம் பாய்ந்த உடன் ராம்குமார் தூக்கிவீசப்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அவருடன் இருந்த மற்ற 4 கைதிகளும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்ததால் அவரை மற்ற கைதிகள் காப்பாற்றவில்லை.

நான் அருகில் ஓடி சென்றேன். அதற்குள் அவர் கீழே சாய்ந்து விட்டார். உடனே அருகில் உள்ள சிறை மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு பணியில் இருந்த டாக்டர் நவீன்குமார் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம்.

மாலை 4.45 மணியளவில் இரவு உணவுக்காக கைதிகள் அவரவர் அறைகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்டனர். ராம்குமாரும் வெளியே வந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக கூறி சென்றார். அப்போது தான் அங்குள்ள மின்சார பெட்டியை உடைத்து மின் வயரை கடித்துவிட்டார். முடிந்தவரை நாங்கள் அவரை காப்பாற்றத்தான் முயற்சித்தோம்.  இவ்வாறு அவர் கூறியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் முன்பு ஆர்ப்பாட்டம் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் ராம்குமார் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்குமார் உறவினர் என்று கூறிக்கொண்டு, செல்வம் என்ற நபர் பிணவறைக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இதையடுத்து அவர் போலீசாரிடம் முறையிட்டபடியே சென்றார். இந்த நிலையில் ராம்குமாரின் உறவினர்கள் பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே மறியல் கைவிடப்பட்டது.

ithaly-003-542x406 copy

Related posts: