கலைஞர் கருணாநிதியின் பூதவுடல் மெரினா கடற்கரையில் அடக்கம்!

Wednesday, August 8th, 2018

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்தின் அருகில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு திமுக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது எனவே சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து மனு தாக்கல் செய்தனர். மேலும் இதை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரனை இரவு 10.30 மணிக்கு நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் நடைபெற்ற விசாரணையில் முடிவில் நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசும் , சென்னை மாநகராட்சியும் புதன் காலை 8 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட உடன் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
அதன்படி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடலை காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்ய முடிவு எடுத்தது அரசின் கொள்கை முடிவாகும். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட்டு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமி சார்பில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு ஆட்சேபணை இல்லை என்று வாதம் வைக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக ஏற்கனவே தொடுக்கப்பட்ட 5 வழக்குகளும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதனால், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான 5 வழக்குகளையும் வாபஸ் பெற அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அந்த 5 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மெரினாவில் நினைவிடம் தொடர்பான 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதால், திமுக தரப்பில் தாக்கல் செய்த மனு மற்றும் வாதங்களை, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு என இரண்டையும் பதிவு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த 2 மனுக்களையும் நீதிபதிகள் ஒப்பிட்டு பார்த்தனர். இதன்பிறகு, நீண்ட நேரத்துக்குப் பிறகு இருதரப்பு வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்டாலின் நெகிழ்ந்து கண்கலங்கிய உணர்ச்சிமிகு சம்பவம் நிகழந்துள்ளது.
தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்த விபரமானது வெளியானவுடன் தொண்டர்களின் உணர்ச்சி மிகு கரகோஷமானது உச்சத்தை அடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஓரமாக நின்றிருந்த திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முன்பாக வந்து தொண்டர்களை பார்த்து நன்றிப்பெருக்குடன் கைகூப்பினார். அப்பொழுது உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்ட அவரது உடல் லேசாக தளர்ந்து சரியவும், அருகில் நின்றிருந்த அ.ராசா, கனிமொழி மற்றும் சேகர் பாபு உள்ளிட்டோர் தாங்கிப் பிடித்தனர்.

Related posts: