மியான்மரின் வெளியுறவு அமைச்சராகின்றார் ஆங் சான் சூ கி !

Wednesday, March 23rd, 2016

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், வெளிநாட்டு பிரஜைகளை குடும்ப உறுப்பினர்களாக கொண்டவர்கள் அங்கு அதிபர் ஆக முடியாது. சூ கியின் மறைந்த கணவரும், 2 மகன்களும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் என்பது, சூ கி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தனது முன்னாள் டிரைவர் யூ கதின் கியாவ் (வயது 69) என்பவரை அதிபர் வேட்பாளராக நிறுத்தினார். அவர் அபார வெற்றி பெற்றார். அவரது மந்திரிசபை விரைவில் பதவி ஏற்க உள்ளது.

இந்த நிலையில், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் சபாநாயகர் மான் வின் காயிங் தான், இன்று புதிய மந்திரிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் சூ கியின் பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது. அவர் கேபினட் மந்திரி ஆகிறார்.புதிய மந்திரிகள் நியமனத்தை அந்த நாட்டின் பாராளுமன்றம் விரைவில் அங்கீகரிக்கும். அதன்பின்னர் மந்திரிசபை பதவி ஏற்கும் என தெரிகிறது.

சூ கி வெளியுறவுத்துறையை கவனிப்பார் என தகவல்கள் கூறுகின்றன. அவர் மந்திரியாகி விட்டால் கட்சி தலைவர் பதவியை துறக்க வேண்டியது வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: