பொருளாதாரத்தை மேம்படுத்த 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத்திட்டங்கள் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

Wednesday, May 13th, 2020

20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்றையதினம் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சிறந்த தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்தியா முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு சட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுள்ளது. அந்த ஊரடங்கு சட்டம் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர்இ அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மாநிலங்களின் பரிந்துரையின் அடிப்படையில் 4 ஆம் கட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது இந்திய பிரதமர் நரேந்ர மோடி குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட்டால் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் என அமெரிக்காவின் விசேட தொற்று நோய் மருத்துவர் என்டனி போசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க செனட்டின் குடியரசுக் கட்சி தலைமையிலான குழுவிடம் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் என்பன மீண்டும் திறக்க முன்னர் அது தொடர்பில் பரிசீலிக்க வேண்டும் என மருத்துவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் வைரஸ் தொற்று வீதத்தில் வீழ்ச்சி ஏற்படாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அதனால் பாரிய தாக்கம் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் கொரோனா வைரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பலி எண்ணிக்கையான 80 ஆயிரத்தை விட நாட்டில் இறப்பு வீதம் அதிகமாக இருக்கலாம் என அமெரிக்காவின் விசேட தொற்று நோய் மருத்துவர் என்டனி போசி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 43  இலட்சத்து 37 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2  இலட்சத்து 92 ஆயிரத்து 403 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரம் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுதியான 15 இலட்சத்து 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: