காத்மாண்டு விமான நிலையத்தில் பங்களாதேஷ் விமானம் விபத்து: 50 பேர் பலி!

Tuesday, March 13th, 2018

காத்மாண்டு விமான நிலையத்தில் பங்களாதேஷ் அரசுக்கு சொந்தமான விமானம் 71 பேருடன் விழுந்து தீபிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் நேபாளம் தலைநகர் காத்மண்டுவுக்கு வந்த யூஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 33 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த 32 பேரும், சீனா மற்றும் மாலத்தீவை சேர்ந்த தலா ஒருவரும் பயணம் செய்ததாகவும், விமானிகள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 71 பேர் அதில் பயணித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேபாளம் நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கோகுல் பன்டாரி, இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts: