பொது வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் ஆதரவு!

Tuesday, October 3rd, 2017

 

ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.

வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான காட்டலோனியா மாகாணத்திற்கு கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

காட்டலோனியாவில் கடந்த 5 ஆண்டுகளாக தனி நாடு கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் அரசும், அரசியலமைப்பு நீதிமன்றமும் இதற்கு அனுமதிக்காததால், வாக்கெடுப்பை முறியடிக்க பொலிசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அரசின் கடும் எதிர்ப்பு வன்முறைகளுக்கு மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 42.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அதில், 90 சதவீதம் மக்கள் சுதந்திர நாடு வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து வாக்களித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனி நாடு கேட்கும் உரிமையை காட்டலோனியா வென்றெடுத்திருப்பதாகவும், சுதந்திர பிரகடனத்துக்கான கதவு திறக்கப்பட்டிருப்பதாகவும் கேட்டலன் தலைவர் கார்லஸ் பூகிடமான்ட் தெரிவித்தார்.

Related posts: