பிரஸல்ஸ் தாக்குதலின் சூத்திரதாரிகள் சகோதரர்கள்?

Wednesday, March 23rd, 2016

பிரஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட காலித், பிராஹிம் எல் பக்ராவி ஆகிய இருவரும் குற்றப் பின்னணி கொண்ட சகோதரர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

காலித் பெல்ஜிய தலைநகர் பிரஸல்ஸில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டில் கடந்த வாரம்தான் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அந்த வீட்டில் ஐ.எஸ். கொடி, சில துப்பாக்கிகள் மற்றும் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பாரிஸ் தாக்குதல் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சலா அப்டேஸ்லாமின் கைரேகை ஆகியன போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரஸெல்ஸ் விமான நிலைய கேமராவில் பதிவான காட்சிகளில் காலிதும் அவரது சகோதரர் எல் பக்ராவியும் நடந்துவரும் காட்சிகள் பதிவாகி உள்ளது. மூன்றாவது நபரான நஜீம் லாச்ரோவியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related posts: