பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

Thursday, May 3rd, 2018

யூதர்கள் அதிக அளவில் வட்டி வசூலித்ததால்தான் படுகொலை செய்யப்பட்டனர் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியதற்கு அமெரிக்கவும், இஸ்ரேலும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜெருசலேம் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜெர்மனியில் 11-ஆம் நூற்றாண்டில் இருந்து யூதர்கள் கொல்லப்பட்டனர். ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள்? யூதர்கள் என்பதால் கொன்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அவர்கள் கொல்லப்பட்டதற்கு மதம் ஒரு காரணம் அல்ல. அவர்கள் கடன் கொடுத்து, அதற்கு அதிக அளவில் வட்டி வசூலித்தனர். அவர்களின் சமூக செயல்பாடுகளால்தான் அவர்களுக்கு அந்த நிலைமை நேரிட்டது. இதற்கான ஆதாரங்கள் யூதர்களே எழுதிய 3 புத்தகங்களில் கிடைக்கின்றன. ஆனால், அரபு நாடுகளில் வசிக்கும் யூதர்கள் இதுபோன்ற அடக்குமுறைகளைச் சந்திக்கவில்லை என்றார் அவர்.

இதனிடையே, அதிபர் மஹ்மூத் அப்பாஸின் கருத்துக்கு அமெரிக்க தூதர் டேவிட் ஃபிரைட்மேன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: யூதர்கள் இனப்படுகொலை நிகழ்ந்த இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு புதிய விளக்கம் கொடுத்து, மிகவும் தரம் தாழ்ந்த செயலில் அப்பாஸ் ஈடுபட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வையும் அவர் தூண்டுகிறார் என்று டேவிட் ஃபிரைட்மேன் கூறினார்.

இதேபோல், அமெரிக்க தூதர் ஜேசன் கிரீன்பிளாட்டும் அப்பாஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வந்தால், பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

Related posts: