பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

Friday, September 30th, 2016

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய இராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய உரி தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த தாக்குதலின் போது 8 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் மாறுபட்ட தகவலை வெளியிட்டது. இந்த தகவல்கள் அந்நாட்டு இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகியது. ஒரு இந்திய ராணுவ வீரர் பிடிபட்டு இருப்பதாகவும் சந்து பாபுலால் என்றும், 22 வயதான அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தகவலை நேற்றே இந்தியா திட்டவட்டமாக  மறுத்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய ராணுவ வீரர் நேற்று முன் தினம் நடைபெற்ற ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” போது பிடிபட்டவர் இல்லை எனவும் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த அந்த வீரர் கவனக்குறைவாக எல்லை தாண்டிச்சென்றவர் என்றும் ராணுவம் நேற்று விளக்கம் அளித்தது கவனிக்கத்தக்கது.

Untitled-2

Related posts: