பயங்கரவாதக் குழு தலைவர்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா !

Sunday, January 28th, 2018

பாகிஸ்தானில் இருந்தவாறு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலீபான் மற்றும் ஹக்கானி குழு பயங்கரவாத தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை நிலைபெறச் செய்வதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. பல ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்த நாட்டை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்திலும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் முழுவதிலும் நடத்தி வருகின்றனர். அமெரிக்க வீரர்களையும் கொன்று குவிக்கும் இவர்கள் தாக்குதல் நடத்திவிட்டு அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்று பதுங்கிக்கொள்கின்றனர். அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த புத்தாண்டு தினத்தன்று பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக தங்களை ஏமாற்றிய பாகிஸ்தானுக்கு முட்டாள் தனமாக 33 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.2 லட்சம் கோடி) அமெரிக்கா தொடர்ந்து நிதி வழங்கி வந்துள்ளது. இதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதில், தலீபான் பயங்கரவாத இயக்க தலைவர்கள் அப்துல்சமத் சானி, அப்துல் குதீர் பசில் அப்துல் பாசர், ஹபீஸ் முகமது பொபால்சைய், மவுலவி இனாயத்துல்லா, ஹக்கானி குழு பயங்கரவாத தலைவர்கள் பகீர் முகமது மற்றும் குலகான் ஹமீதி ஆகிய 6 பேரையும் சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது.

இந்த 6 பேருக்கும் யாரும் எவ்விதத்திலும் அமெரிக்க எல்லை வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் நிதி உதவி அளிக்கக்கூடாது. இந்த 6 பேரும் அமெரிக்காவில் வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு மற்றும் நிதி புலனாய்வுத்துறை சார்பு செயலாளர் சிகால் மண்டேல்கர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள், தனிப்பட்ட நபர்களை கடத்துவோர் மற்றும் இந்த குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவேண்டும். தலீபான்களுக்கோ, ஹக்கானி குழுவினருக்கோ எந்த விதத்திலும் பாகிஸ்தானில் தனது மண்ணில் புகலிடம் அளிக்கக்கூடாது. அவர்கள் நிதி திரட்டவும் ஆதரவு தரக்கூடாது” என்று கூறியுள்ளார்.

Related posts: