29ஆம் திகதி சசிகலா புஷ்பாவை ஆஜராகுமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, August 24th, 2016

சசிகலா புஷ்பா, கணவர், மகன் ஆகியோர் 29 ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர்.

அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜரானார்.

அவர் வாதாடுகையில், சசிகலா புஷ்பா தரப்பில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கடந்த 19-ந் திகதி மதுரைக்கு வந்து வக்கீல் முன்பு வக்காலத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 8-ந்தேதி வெளி நாடு சென்ற சசிகலா புஷ்பா, 14-ந் திகதி தாயகம் திரும்பினார். பின்னர் 3 நாட்கள் கழித்து 17-ந்தேதி மீண்டும் வெளிநாடு சென்றுள்ள அவர், அங்குதான் உள்ளார்.

அப்படி இருக்கும் போது 19-ந் திகதி எப்படி மதுரையில் கையெழுத்திட்டு இருக்க முடியும்? எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி ‘சசிகலா புஷ்பா, மகன் பிரதீப் ராஜா, கணவர் லிங்கேஸ்வரன் மூவரும் வருகின்ற 29-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Related posts: