நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் – ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை!

Monday, March 18th, 2024

“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார்.

இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின்,

வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை.

மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஓர் அடி தொலைவில் தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது.

நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முடிவடைந்தது.

உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 71 வயதான புட்டின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக நீடிப்பார். அதன்மூலம் ரஷ்யாவை அதிக வருடங்கள் ஆண்டவர் என்ற பெருமையையும் விளாடிமிர் புட்டின் தனதாக்கிக்கொள்கின்றார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்களாக தொடரும் யுத்தம், எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் மரணம் போன்ற சம்பவங்கள், இந்த தேர்தலில் புட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மக்கள் திரண்டு வந்து விளாடிமிர் புட்டின் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், அவர் அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதி பதவியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

விளாடிமிர் புட்டின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார். போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார். எனவே இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடைபெறவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

கேஜிபி லெப்டினன்ட் கர்னல்(KGB lieutenant colonel) ஆக இருந்த விளாடிமிர் புடின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: