நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போலந்தில் போராட்டம்!

Sunday, December 18th, 2016

ஊடகங்களின் செய்தி வெளியீட்டை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக போலந்து தலைநகர் வார்சாவில் நாடாளுமன்ற கட்ட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் வரவுச் செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பை தாமதமாக்கியது. பின்னர் அது முக்கிய நாடாளுமன்ற அறைக்கு வெளியே நடத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு வரை நூற்றுக்கணக்கான காவல்துறையினர் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்திருந்தனர்.

“நாடாளுமன்ற கட்டடத்தில் முதல்முறையாக காவல்துறையினரை பார்க்கிறேன்” என்று விக் பிளாட்பாம் கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மிகையில் ஸ்டெரிபா தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

வலது சாரி சட்டம் மற்றும் நீதி கட்சியின் தலைவர் யாரோஸ்வாஃப் காட்ச்சின்ஸ்கி இந்த போராட்டம் “போக்கிரித்தனம்” என்று முன்னதாக கண்டித்திருக்கிறார்.

“எங்களை பயமுறுத்த யாரையும் அனுமதிக்கமாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் பிரதமர் பியட்டா சியிட்லோவோடு அவர் நாடாளுமன்றத்தை விட்டு உள்ளூர் நேரப்படி காலை மூன்று மணிக்கு வெளியேறினார்.

அதிகாரிகளின் வாகனங்கள் செல்வதற்கு வழியேற்படுத்த, காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெர்ஸி மேஸ்டோவிக், டிவிஎன்24 செய்திகள் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பத்திரிகைகளை தவிர்த்துவிட்டு சிறியதொரு அரங்கத்தில் வைத்து வெள்ளிக்கிழமை வரவுச் செலவு திட்டம் தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு நடத்தியது சட்டத்திற்கு புறம்பானது என்று அரசை எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

1989 ஆம் ஆண்டு ஜனநாயக முறை மீட்கப்பட்ட பிறகு நாடாளுமன்ற அறைக்கு வெளியே நடத்தப்பட்டுள்ள வாக்கெடுப்பு இதுதான்.

வரவுச் செலவு திட்டத்தை அங்கீகரிக்க போதுமான உறுப்பினர்கள் இருந்ததாக காட்ச்சின்ஸ்கியும், பிற சட்டம் மற்றும் நீதி கட்சியின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இது தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரியுள்ளனர்.

போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இல்லை. மேலும் அதில் பங்கேற்ற பலரும் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று சந்தேகப்படுகின்றோம் என்று நோவாடெஸ்னா என்கிற எதிர்க்கட்சியின் தலைவர் ரிஸ்சார்ட் பெட்ரு தெரிவித்திருக்கிறார்.

தங்களுடைய பணியில் அரசு விதிக்க திட்டமிட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒருநாள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை செய்திகளாக்க போலந்தின் பக்கசார்பற்ற ஊடகங்கள் மறுப்புத் தெரிவித்திருக்கின்றன.

அடுத்த ஆண்டு முதல் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்களே நாடாளுமன்ற கட்டடத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்ய தெரிவு செய்யப்பட்ட 5 தொலைக்காட்சி நிறுவனங்களே அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது,

இந்த நடவடிக்கைகள், கட்டுப்பாடானவை என்று நம்பவில்லை என்று அரசு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அதிகாரத்திற்கு வந்த பிறகு, வலது சாரி சட்ட மற்றும் நீதி கட்சியானது, பத்திரிகை சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், நீதி துறையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது.

_93009435_7db45626-5014-4253-b3c3-24ac6328e814

Related posts: