தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவதற்கு அப்பாஸ் எதிர்ப்பு!

Wednesday, January 11th, 2017

டெல் அவிவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்ற வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்பிடம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவது குறித்து டிரம்ப் பல தடவைகள் குறிப்பிட்டிருந்தார். டிரம்பினால் அமெரிக்காவின் இஸ்ரேல் தூதுவராக தேர்வு செய்யப்பட்ட டேவிட் பிரிட்மன்னும் தூதரகத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

எனினும் அப்பாஸ் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில், இந்த நடவடிக்கை அமைதி செயற்பாடுகளை சீர்குலைக்கும் என்றும் இரு நாட்டு தீர்வுத் திட்டம் மற்றும் முழு பிராந்திய பாதுகாப்பிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தடுக்குமாறு ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் அப்பாஸ் கடிதம் எழுதி இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெருசலம் தமது எதிர்கால தலைநகர் என்று பலஸ்தீனம் வலியுறுத்தும் நிலையில் முழு ஜெருசலமும் பிரிக்கப்படாத தலைநகர் என்று இஸ்ரேல் குறிப்பிடுகிறது. அமெரிக்கா மற்றும் ஐ.நா உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர் என்பதை நிராகரிக்கின்றன.

coltkn-01-11-fr-05151753670_5150539_10012017_MSS_GRY

Related posts: