தாமிரபரணி நதியிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு கோக், பெப்ஸிக்கு இடைக்காலத் தடை!

Tuesday, November 22nd, 2016

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பெப்ஸி மற்றும் கோக் குளிர்பான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீர், அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், பெப்ஸி, கோக் தொழிற்சாலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி திருநெல்வேலி மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாகர் என்பவர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

_92594604_pepsiap_nocredit

சிட்கோ போன்ற தமிழ்நாடு அரசின் பிற தொழிற்பேட்டைகள் தண்ணீர் சார்ந்த தொழிற்சாலைகளை வைக்கத் தடைவிதித்திருப்பதை தனது மனுவில் பிரபாகர் சுட்டிக்காட்டியிருந்தார். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், ஆழ்துளை கிணற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீரை லிட்டருக்கு 3.75 பைசாவுக்கு வழங்குவது கூடாது என்றும் பிரபாகர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தாங்கள் பொதுப்பணித் துறையின் அனுமதி பெற்றே குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீரை வழங்கிவருவதாக சிப்காட் தனது பதில் மனுவில் கூறியிருந்தது. தாங்கள் முறையான அனுமதியைப் பெற்றே சிப்காட்டிடமிருந்து தண்ணீரைப் பெற்றுவருவதாக கோக், பெப்ஸி நிறுவனங்கள் கூறியிருந்தன.

_92594599_cokecolagetty_nocredit

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்த நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க இடைக்காலத் தடை விதித்து, வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

“ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் முழுக்க தண்ணீர் பிரச்சனை நிலவும்போது இந்த ஆலைகள் இவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துவது சரியில்லை. அரசே நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்காமல் இதற்கு தடை விதிக்க வேண்டும்” என பிரபாகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: