டில்லியில் தொடரும் அடை மழை – வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Saturday, July 15th, 2023

இந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

ஹரியாணாவில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணை திறக்கப்பட்டு யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையினால் இந்தியத் தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் முழ்கியுள்ளன.

யமுனை நதிக்கு மிக அருகேயுள்ள போட் கிளப், பாண்டவ் நகர், பஜன்புரா ஆகிய பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டில்லி செங்கோட்டை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல முக்கிய அரச கட்டடங்களிலும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

வெள்ள பாதிப்பு காரணமாக ஒட்டுமொத்த டில்லிக்கும் குடிநீர் வழங்கி வரும் வஜிரபாத், சந்திரவால், ஓக்லா உள்ளிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டில்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனை ஆற்றில் ஓடும் நீரின் அளவு குறைந்தவுடன் மீண்டும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இங்கு கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கினால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குத் தேவையான நிவாரண ஏற்பாடுகளும் மாநில அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டு;ளது.

உத்தரகண்ட், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக கனமழைக்கு பெய்து வருவதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: