வடகொரியாவை ஆதரிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, May 19th, 2017

வடகொரியாவையும், அதன் அணு ஆயுத திட்டங்களையும் ஆதரிக்கும் நாடுகளும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவினால் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஏவுகணை சோதனையொன்று நடத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைக்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டதுடன், வடகொரியா மீது புதிய தடைகளை விதிப்பது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவிற்கு ஆதரவை வெளிப்படுத்தி வரும் நாடுகளை உடனடியாக அந்நடவடிக்கையிலிருந்து பின்வாங்குமாறு அழைப்பு விடுக்கிறோம். இன்றேல், வடகொரியா எதிர்நோக்கும் தடைகளை, வடகொரியாவிற்கு ஆதரவாக செயற்படும் நாடுகளும் எதிர்கொள்ள நேரிடும்” என எச்சரித்தார்.

பாரிய அணு ஆயுதங்களை சுமந்துச் செல்லும் திறன் கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டிருந்தது.

அமெரிக்காவை இலக்கு வைக்கும் வகையில் வடகொரியா ஏவுகணைகளை தயார்படுத்தி வருகின்ற நிலையில், சமீபத்திய ஏவுகணையானது மிகவும் முன்னேற்றகரமான வகையில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: