ஜோன் மக்கெய்னுக்கு புற்றுநோய்!

Friday, July 21st, 2017

ஐக்கிய அமெரிக்க செனட்டரும், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் மக்கெய்ன், ஆக்ரோஷமான மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என, அவரது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

3 தசாப்தங்களுக்கும் மேலாக செனட்டில் பதவி வகித்துவரும் மக்கெய்ன், 6ஆவது தடவையாக, கடந்தாண்டு நவம்பரில் செனட்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
கடற்படையில் பணியாற்றிய அவர், வியட்னாம் போரின் போது கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

அண்மையில், அவரது இடது கண்ணுக்கு மேலாகக் காணப்பட்ட இரத்தக் கட்டியொன்று நீக்கப்பட்டது. அந்த சத்திரசிகிச்சை, வெற்றிகரமாக அமைந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அந்த இரத்தக் கட்டி, அவருக்குக் காணப்படும் மூளைப் புற்றுநோயுடன் சம்பந்தப்பட்டது என அறிவிக்கப்படுகிறது.

சத்திரசிகிச்சையிலிருந்து அவர், சிறப்பாகக் குணமடைந்துவருகிறார் எனத் தெரிவித்த வைத்தியர்கள், வேதிச் சிகிச்சையும் கதிரியக்கச் சிகிச்சையும் அவருக்கு வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.

இவ்வகையான மூளைப் புற்றுநோய், மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படுவதால், 80 வயதான மக்கெய்ன், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

அவரது நோய் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், “செனட்டர் ஜோன் மக்கெய்ன், எப்போதும் போராடுபவராக இருந்தார். விரைவில் குணமாகுங்கள்” என்று தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், மக்கெய்னை வெற்றிகொண்டு ஜனாதிபதியாகிய பராக் ஒபாமா கருத்துத் தெரிவிக்கும் போது,

“மக்கெய்ன், அமெரிக்காவின் நாயகன். நான் பார்த்தவர்களில், மிகவும் வீரமான போராளிகளுள் ஒருவர். எதற்கு எதிராகச் செயற்பட முயல்கிறது என்பது, புற்றுநோய்க்குத் தெரியவில்லை. அதற்கு நரகத்தைக் கொடுங்கள், ஜோன்” என்று தெரிவித்தார்.

Related posts: