ஜெயலலிதா பதவியேபில் மு.க.ஸ்டாலின் ?

Monday, May 23rd, 2016

முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அழைப்பினை ஏற்று கருணாநிதி கலந்து கொள்வது சந்தேகமே, இருப்பினும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

விழாவில் கலந்து கொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பங்கேற்றால் ஜெயலலிதா பதவியேற்பை விட தான் பங்கேற்றதே முக்கியத்துவம் பெறும் என்பதால் அவர் இந்த முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அவர் அப்படி கலந்து கொண்டால் அது ஒன்றும் முதன்முறை அல்ல. காரணம், ஏற்கனவே ஒருமுறை ஸ்டாலின், ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்தான்.

2002ம் ஆண்டு நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது தலைமையில் புதிய அதிமுக அமைச்சரவை பதவியேற்றது.

அந்தப் பதவியேற்பு விழாவில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகனும், அப்போது சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவைப் பார்த்து ஸ்டாலின் வணக்கம் வைக்க, ஜெயலலிதா பதிலுக்கு வணக்கம் வைக்க என்று திமுக –அதிமுக அதிகார மையங்கள் இரண்டும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது. அந்த அதிசயம் மீண்டும் இந்த பதவியேற்பு விழாவில் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related posts: