செய்தியாளர்களுக்கு ஆபத்து: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Saturday, August 4th, 2018

ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வரும் காட்டமான கருத்துக்கள், செய்தியாளர் மீதான வெறுப்பை வளர்த்து அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மனித உரிமை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா. மற்றும் அமெரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அதிகாரி டேவிட் காயே மற்றும் எடிசன் லன்ஸா ஆகியோர் கூறியுள்ளதாவது:

தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், அவற்றை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக மிகக் கடுமையான கருத்துகளை அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

அவரது இத்தகைய தாக்குதல் உத்தியின் காரணமாக, செய்தியாளர்கள் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையும், வெறுப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக, அவர் மீதான தாக்குதல்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை அமெரிக்காவின் எதிரிகள்’ என்றும், வெறுப்பை மனதில் வைத்து பொய்ச் செய்திகளை பரப்புவர்கள்’ என்றும் டிரம்ப் விமர்சித்துள்ளது, பத்திரிகை சுதந்திரத்துக்கும், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கும் எதிரானதாகும்.

அதிபர் டிரம்ப் மட்டுமன்றி, அவரது அரசு அதிகாரிகளும் பத்திரிக்கைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், நாட்டின் நீதித் துறையே ஈடுபட்டுள்ளது, ரகசியத் தகவல்களைப் பெறும் ஊடகங்களின் திறனை கடுமையாக பாதிக்கிறது.

ரகசியத் தகவல்களை வெளியிடுவதன் மூலம் அநீதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர்களை மிரட்டும் வகையில், உளவுத் தடுப்புச் சட்டத்தை அரசு கையிலெடுத்து வருகிறது. அந்த வழக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்று டேவிட் காயே மற்றும் எடிசன் லன்ஸா குறிப்பிட்டனர்.

அமெரிக்கச் செய்தியாளர்கள் தேசப் பற்று அல்லாதவர்கள் என்றும், தங்களது செய்திகள் மூலம் பிறரது உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related posts: