சி.சி.டி.வி. கமரா காட்சியால் பரபரப்பு: ரெயில்வே போலீஸ் அதிகாரி விளக்கம்!

Friday, August 12th, 2016

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.5¾ கோடி கொள்ளை போன சம்பவத்தில் சி.சி.டி.வி. கமரா காட்சி வெளியாகி உள்ளது. அக்காட்சியில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவது பதிவாகி உள்ளது. அதில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரெயில் பெட்டியின் மேற்கூரையில் துவாரம் இருப்பதற்கான அறிகுறி இல்லை.

எனவே சென்னையில் பயணிகளை இறக்கிவிட்டு, சேத்துப்பட்டு பணிமனையில் ரெயில் நிறுத்தப்பட்டிருந்தபோது குறிப்பிட்ட பெட்டியில் கொள்ளை சம்பவம் நடந்திருக்குமா? என்ற புதிய சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தாம்பரம் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமராவில் சேலம் எக்ஸ்பிரஸ் வரும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த காட்சியை 2 நாட்களுக்கு முன்பே சோதனைக்கு அனுப்பி விட்டோம். ஆனால் சம்பந்தப்பட்ட பெட்டியில் துவாரம் உள்ளது என்பதை உறுதியாக நிரூபிக்க முடியவில்லை. கமராவில் பதிவான காட்சி ஒளிமங்கிய நிலையில் இருக்கிறது. எனவே நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அந்த காட்சி மீண்டும் சோதனை செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் வரும் இறுதி அறிக்கையில் தான் உண்மை தெரியவரும். அதுவரை யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: