சுதந்திர தினத்துக்குள் பிரதமராகிறார் இம்ரான்!

ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மை பலம் இல்லாவிடிலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டில் இருந்து வெளியாகும் நாளேடுகளும் உறுதிபடுத்தியுள்ளன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசியலில் குழப்பங்கள் மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்தத் தகவல்கள் இம்ரான் கான்தான் அந்நாட்டின் அடுத்த பிரதமர் என்பதற்கு அச்சாரமிடும் வகையில் அமைந்துள்ளன.
மொத்தம் 342 எம்.பி.க்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு நாடாளுமன்றம் உருவானது.
அதேவேளையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -ஏ – இன்சாஃப் கட்சி (பிடிஐ) தேர்தலில் 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. மறுபுறம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பிஎம்எல்-என்) 64 இடங்களையும், பிலாவால் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 43 இடங்களையும் கைப்பற்றின. இதைத் தவிர சுயேச்சை வேட்பாளர்கள் 13 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர்.
இதனால் கூட்டணி ஆதரவுடன் மட்டுமே ஆட்சியமைக்க வேண்டிய சூழல் உருவானது. இருப்பினும், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக நவாஸஹடனோ, ஜர்தாரியுடனோ ஒருபோதும் கைகோக்க மாட்டோம் என்று இம்ரானின் பிடிஐ கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.
இதன் காரணமாக அந்நாட்டு அரசியல் அரங்கில் தெளிவற்ற நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், இம்ரான் கட்சியின் தலைமை நிர்வாகிகளும், முக்கியத் தலைவர்களும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் ஏறத்தாழ உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பிடிஐ கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நையினுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்காக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளோம். பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பார் என்றார் அவர்.
Related posts:
|
|