சிங்கப்பூரின் கவச வாகனங்களை திருப்பி அளித்தது ஹொங்கொங்!

Thursday, January 26th, 2017

சுங்க அதிகாரிகளால் தடுத்தவைக்கப்பட்டிருந்த சிங்கப்பூரின் கவச வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்கவிருப்பதாக ஹொங்கொங் கூறியுள்ளது. அவை கடந்த 2 மாதங்களாக ஹொங்கொங்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

ஹொங்கொங் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரின் 9 கவச வாகனங்களைத் தடுத்து வைத்தனர்.

கவச வாகனங்கள், சிங்கப்பூர் ஆயுதப் படைக்குச் சொந்தமானவை. தாய்வானில் நடைபெற்ற இராணுவப் பயிற்சிக்குப் பின்னர் வர்த்தகக் கப்பல் நிறுவனம் ஒன்று அவற்றை ஹொங்கொங் வழியாகச் சிங்கப்பூருக்கு ஏற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஹொங்கொங்கில் அவை தடுத்துவைக்கப்பட்டன.

அதனையடுத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி லியுங் சுன்யிங்கிற்குக் கடிதம் எழுதினார். கவச வாகனங்களை உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கும்படித் லீ அதில் கேட்டுக்கொண்டார்.

இவ்வேளையில், கவச வாகனங்களைத் திருப்பி ஒப்படைப்பது குறித்துப் பிரதமருக்கு ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது.

ஹொங்கொங் அதிகாரிகள் தங்கள் விசாரணைகளை நிறைவுசெய்துள்ளனர். அதையடுத்து இராணுவ வாகனங்களும், மற்ற சாதனங்களும் சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஆக்ககரமான முடிவு என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.

இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வுகாண ஹொங்கொங் வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமர் லீ சியென் லுௗங் நன்றி தெரிவித்திருப்பதாகவும் அமைச்சு கூறியது.

sg-saf-terrex

Related posts: