சவுதி பத்திரிகையாளர் கொலை: வெளிப்படையான விசாரணை வேண்டும் – ஐரோப்பிய கூட்டமைப்பு !

Monday, October 22nd, 2018

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார். இதை 17 நாட்களுக்கு பிறகு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், இஸ்தான்புல் துணை தூதரகத்துக்கு கசோக்கி சென்றபோது, அவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறி, அந்த சண்டையில் அவர் உயிரிழந்தார் என்று சவுதி அரேபியா கூறியது.

ஆனால் இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை, நாங்கள் இதில் விடையைக் கண்டுபிடிப்போம். ஆனால் அந்த நாட்டுடனான ஆயுத பேரத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம். அப்படிச்செய்தால் அது அவர்களை விட நமக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இப்போது கூறி உள்ளார்.

கசோக்கி சவுதி ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டதற்கு தங்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கு இடையே கசோக்கி கொல்லப்பட்ட விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு குரல் கொடுத்துள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் உயர் அதிகாரியான பெடரிகா மொகரினி கூறும்போது, ‘‘ சவுதி பத்திரிகையாளர் கசோக்கி எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக எங்கள் கூட்டாளிகளைப்போன்று நாங்களும் முழுமையான, நம்பகத்தகுந்த, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’’ என கூறினார்.

Related posts: