சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்போருக்கு இடமில்லை – அவுஸ்திரேலியா!

Tuesday, November 15th, 2016
நாட்டின் எல்லையின் ஊடாக படகுகள் மூலம் ஆட்களை கடத்துவதனை தடுப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த நடவடிக்கைகள் முன்னொருபொழுதும் இல்லாத வகையில் வலுவான முறையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியினூடாக படகுகள் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர் வழிமறிக்கப்படுவதுடன் அவ்வாறானோர் திருப்பியனுப்பப்படுவர் என்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.நாட்டின் எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை பிரிவு இதுவரையில் ஆட்கடத்தல்காரர்களினால் 29 வள்ளங்கள் மூலம் வந்த 740 பேர் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பப்ட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் மேலும்,சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் நாவுற மற்றும் பப்புவா நியுகினியாவில் குடியமர்த்துவது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் அனுமதியுடன் அமெரிக்காவின் அகதிகள் தொடர்பான நிர்வாக வேலைத்திட்டத்தின் கீழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் குடியமர்த்தப்படவுள்ளதுடன் இதற்காக அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைவாக பெண்கள் சிறுவர்கள் மற்றும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட அகதிகளை மீளக்குடியமர்த்துவதில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை ஏற்கனவே உள்ள நிரந்தர குடியமர்த்தல் பப்புவா நியூகினியா மற்றும் கம்போடியா நடவடிக்கைகளுக்கு மேலதிகமான நடவடிக்கையாகும். அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தல் தொடர்பில் இவ்வாறான மீளக்குடியமர்த்தல் நடவடிக்கை இனி ஒருபோதும் இடம்பெறாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய எல்லைப்பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப் படவில்லை.இதனால் சட்டவிரோதமாக படகுகள்மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் இவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் இது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத படகுகள் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர் இனி ஒருபோதும் குடியமர்த்தப்படமாட்டார்கள் என அவுஸ்ரேலியா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. அவுஸ்ரேலிய எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு அவுஸ்ரேலிய பாதுகாப்பு படை பாரியளவில் உதவிவருகின்றது. அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றது. எதிர்காலத்தில் படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக எல்லைகளுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

e02f3e899894d65165dee711d6f9050f_XL

Related posts: