மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!

Wednesday, August 8th, 2018

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்ததை ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நடந்த சந்திப்பு அது என்றும் அது சட்டபூர்வமானது தான் எனவும் ட்ரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை வெற்றி பெறச் செய்வதற்கு ரஷ்யா தலையிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தும் நோக்கில் அவருக்கு எதிரான தகவல்களை பெறுவதற்காக ட்ரம்ப் டவரில், ரஷ்யாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன் ஜீனியர் ட்ரம்ப் சந்தித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இக் குற்றச்சாட்டை ட்ரம்பும் அவரது மகனும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். எனினும் இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் மகன் அபாயத்தில் சிக்கியிருப்பதை நினைத்து ட்ரம்ப் கவலையில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ர~;ய வழக்கறிஞருடனான தனது மகனின் சந்திப்பை ட்ரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டரில் பக்கத்தில் எனது மகன் சட்டரீதியான அபாயத்தில் இருப்பதை நினைத்து தான் வருந்துவதாக வெளியான செய்திகள் கற்பனையானது. தேர்தலில் எதிரியை வீழ்த்துவதற்காக எதிரி குறித்த தகவலை அடுத்தவர்களிடம் பெறுவது சட்டபூர்வமான ஒன்றுதான். அரசியலில் இதுபோன்று நடைபெற்று வந்துள்ளது. ஆனால் அதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். முதலில் ரஷ்ய வழக்கறிஞருடனான தனது மகனின் சந்திப்பை ட்ரம்ப் மறுத்து வந்த நிலையில் தற்போது அதை ஒப்புக்கொள்வது போன்ற கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: