கனடா துப்பாக்கிச் சூடு: ஐ.எஸ். பொறுப்பேற்பு!

Thursday, July 26th, 2018

டொரன்டோ நகரில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

டொரன்டோ நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் ஹுசைன், ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் ஆவார்.சிரியாவிலும், இராக்கிலும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். படையினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் கூட்டணி நாடுகளின் மக்கள் மீது தாக்குதல் நடத்தும்படி எங்களது உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில், ஃபைசல் ஹுசைன் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார் என்று அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

எனினும், தாக்குதல் நடத்திய ஃபைசல் ஹுசைன் மன நோயாளி எனவும், அதற்காக அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் சிபிசி நியூஸ்’ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அவர் மன நல பாதிப்புக்குள்ளானவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, கனடாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், ஃபைசல் ஹுசைனின் பெயரை வெளியிட்டதாக ஆன்டாரியோ மாகாண சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டொரன்டோ நகரின் கிரீக்டெளன் பகுதியில், நடைபாதை வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த ஃபைசல் ஹுசைன், அந்தப் பகுதியில் இருந்தவர்களை நோக்கி கைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.

டான்ஃபோர்த் சாலையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 வயது பெண்ணும், 10 வயது சிறுமியும் உயிரிழந்தனர்; 10 முதல் 59 வயது வரை கொண்ட 13 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்த போலீஸார், டான்ஃபோர்த் சாலையை சுற்றிவளைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, போலீஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஃபைசல் ஹுசைன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் வம்சாவளி இளைஞர்

டொரன்டோவில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் ஹுசைன் பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவரது பெற்றோர்கள் பாகிஸ்தானிலிருந்து கனடாவில் குடியேறியவர்கள் எனவும், டொரன்டோ நகரில் வசித்து வந்த ஃபைசல் ஹுசைன், பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: