கடுமையான பதிலடிவழங்கப்படும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

Sunday, August 12th, 2018

தங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தால், அதற்கு அனைத்து விதங்களிலும் கடுமையான பதிலடி தரப்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ரஷியப் பிரதமர் டிமித்ரி மெத்வெடேவ் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிரிட்டனில், முன்னாள் ரஷிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அந்தத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷிய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளின் அமெரிக்க டாலர் பரிமாற்றம் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு ரஷிய வங்கிகளின் செயல்பாடுகளுக்கோ, கரன்சிகளுக்கோ தடை விதிக்கப்படுமேயானால், எங்கள் நாட்டின் மீது பொருளாதாரப் போர் பிரகடனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்.

எனவே, அத்தகைய தடைகளுக்கு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும், தேவைப்பாட்டால் பிற’ வழிமுறைகளிலும் ரஷியா மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும்.

ரஷியாவின் தவறான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காவே பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா காரணம் கூறி வருகிறது.

ஆனால், தனக்கு அதிக பலம் வாய்ந்த ஒரு போட்டியாளராக ரஷியா இருப்பதை அந்த நாடு விரும்பவில்லை என்பதும், போட்டியிலிருந்து ரஷியாவை விலக்க வேண்டும் என்பதுமே இத்தகைய பொருளாதாரத் தடைகளுக்குக்கான உண்மைக் காரணம் என்றார் அவர்.

கடந்த 1990-ஆம் ஆண்டுகளில், ரஷிய ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்து பிரிட்டனுக்கு ராணுவ ரகசியங்களை அளித்து வந்தார்.

அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர். எனினும், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரிபால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.

இந்தச் சூழலில், செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யூலியா மீது கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அதையடுத்து, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இருவரும் சாவின் விளம்புக்கு சென்று திரும்பினர்.

இந்த நச்சுத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது. எனினும் ரஷியா அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன. ரஷியாவும் அதற்குப் பதிலடியாக அந்த நாடுகளின் தூதர்களை வெளியேற்றது.

இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வந்தது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் வியாழக்கிழமை அறிவித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த 1991-ஆம் ஆண்டில் இயற்றிய ரசயான மற்றும் உயிரி ஆயுதப் போர் ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகிறது என்றும், நாடாளுமன்ற அறிவிக்கைக் காலமான 15 நாள்களுக்குப் பிறகு, வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷியா ரூபிளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாகவே, ரஷியப் பிரதமர் இத்தகைய கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts: