ஐ.எஸ்ஸிடமிருந்து பால்மைரா நகரை சிரிய இராணுவம் மீட்டது.

சிரியாவில் தொன்மையான நகரமான பால்மைராவை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் வெள்ளிக்கிழமை மீட்டது.
இஸ்லாமிய தேசம் அமைப்பதாகக் கூறி சிரியா, இராக்கில் தாக்குதல் நடத்தி பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதுடன், பல்வேறு நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது ஐஎஸ் அமைப்பு. அமெரிக்கா தலைமையில் ஐரோப்பிய நாடுகள், ஐஎஸ் அமைப்பை ஒடுக்க சிரியா, இராக்கில் வான் வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கின.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷியாவும், ஐஎஸ் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. சிரியாவில் உள்ள தொன்மையான நகரான பால்மைராவை மீட்க ரஷிய ராணுவத்தின் உதவியுடன் சிரியா ராணுவ வீரர்கள் கடந்த சில நாள்களாக ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் கடுமையாகப் போரிட்டனர். இதையடுத்து, நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறிவிடுமாறு ஐஎஸ் பயங்கரவாதிகள் அறிவித்தனர். இந்நிலையில், பால்மைரா நகரை சிரியா ராணுவம் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடும் போருக்குப் பிறகு பால்மைரா நகரம் மீட்கப்பட்டது. பயங்கரவாதிகள் தரப்பில் அதிக அளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
பல்மைராவில் இருந்து இராக்குக்கு செல்லும் நெடுஞ்சாலையை ராணுவத்தினர் துண்டித்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் பால்மைரா நகரை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். யுனெஸ்கோவால் உலகின் தொன்மைச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்த அந்நகரில் இருந்த கோயில்கள் உள்ளிட்டவற்றை பயங்கரவாதிகள் வெடிவைத்துத் தகர்த்தனர். இதனிடையே, சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் இரண்டாவது நிலை கமாண்டர் முஸ்தபா-அல்-குவாலி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|