சிறையில் சசிகலா: அதிமுகவின் அதிகார மையமாகும் ஐவர் அணி?

Wednesday, February 15th, 2017

அதிமுக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு சிறைக்குச் சென்றதை அடுத்து, அக்கட்சியின் அதிகார மையமாக ஐவர் அணி செயல்படும் என்று கருதப்படுகிறது.

சசிகலாவின் அணியில் இருக்கும் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மூத்தத் தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் தான் அந்த ஐவர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வரும்காலத்தில், அதிமுக தரப்பில் இருந்து தமிழக அரசியலில் மிக முக்கிய பங்கை இந்த ஐவர் ஆற்றுவார்கள் என்றும், எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்வரை இந்த ஐவர் அணிதான், சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களை கட்டிக்காக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து அவைத் தலைவர் இ.மதுசூதனன் நீக்கப்பட்டதை அடுத்து, புதிய அவைத் தலைவராக கே.ஏ.செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.

ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவால், செங்கோட்டையன் ஓரம்கட்டப்பட்டிருந்ததும், சசிகலா பொதுச் செயலரானதும் கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தந்ததும் குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை அவர் 2016 மே சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை தீவிர அரசியலில் ஈடுபடாமல்தான் இருந்தார். ஆனால், அவருக்கு ஜெயலலிதா மீண்டும் அதிமுக வேட்பாளர் என்ற வாய்ப்பை அளித்தார். அதில் அவர் வெற்றி பெற்று வனத்துறை அமைச்சராகவும் பதவியேற்றார்.

தமிழக அமைச்சரவையில், ஜெயலலிதா, பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தை சீனிவாசன் தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

அதே போல, பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர், அதிமுகவின் முக்கிய அதிகார மையங்களாக தாங்கள் இருப்பதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தான் பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிய, சசிகலாவுக்கு ஆதரவாக இவர்கள் இருந்தனர். தற்போது சசிகலா சிறை சென்றிருப்பதால், அதிமுகவின் அதிகார மையமாக இந்த ஐவர் அணி செயல்படும் என்று தெரிகிறது.

என்றாலும், இவர்கள் வசம் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை கட்டிக்காத்து பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை இவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்களா? அல்லது இவர்களுக்குள் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்து உட்பூசல் ஏற்படுமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 five_admk_2

Related posts: