எம்.பி. பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் இராஜிநாமா!

ஆஸ்திரேலியாவில், ஆளும் லிபரல் கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக அண்மையில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியையையும் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ஆளும் லிபரல் கட்சி ஒரே ஒரு கூடுதல் எம்.பி.யின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மால்கம் டர்ன்புல்லின் ராஜிநாமா குறித்து, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:
முன்னாள் அதிபர் மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜிநாமா செய்துள்ளார்.
தனது 14 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் வென்ட்வெர்த் தொகுதி வாக்காளர்களின் அன்பைப் பெற்றுள்ள அவர், பிரதமராக தனது பணியை சிறப்புற மேற்கொண்டார் என்று மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த மால்கம் டர்ன்புல்லுக்கு எதிராக, கட்சியின் முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான பீட்டர் டட்டன் அண்மையில் போர்க் கொடி தூக்கினார்.
அதையடுத்து, டர்ன்புல் மற்றும் டட்டனுக்கு இடையே தலைமைப் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில், 48 வாக்குகள் பெற்று பிரதமர் டர்ன்புல் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பீட்டர் டட்டனுக்கு 35 வாக்குள் கிடைத்தது. இதையடுத்து, பதவி நீக்க முயற்சியில் இருந்து டர்ன்புல் தப்பினார்.
எனினும், அவரது தலைமைக்கு எதிராக டட்டன் தொடர்ந்து போராடியதைத் தொடர்ந்து, கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பெரும்பான்மையான லிபரல் கட்சி எம்.பி.க்கள் மனு தாக்கல் செய்தனர். அதையடுத்து, தனது தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் மால்கம் டர்ன்புல் விலகினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், கிளர்ச்சியைத் தொடங்கி வைத்த பீட்டர் டட்டனை நிதியமைச்சர் ஸ்காட் மோரிசன் தோற்கடித்து, கட்சியின் புதிய தலைவராகவும், நாட்டின் 30-ஆவது பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Related posts:
|
|