மரண தண்டனை சட்டத்தை கொண்டுவருகின்றது துருக்கி?

Sunday, July 17th, 2016

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி செய்ததை தொடர்ந்து இச்சதியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டிக்க மரண தண்டனை சட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் நேற்று மாலை முதல் முயற்சி மேற்கொண்டது. நள்ளிரவில் இம்முயற்சி தீவிரம் அடைந்துள்ளது.

முதல் கட்டமாக, ராணுவ தலைமை தளபதியை கலகக்காரர்கள் சிறை பிடித்துள்ளனர். பின்னர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவரை ‘ஆட்சி ராணுவத்தின் கீழ் வந்துள்ளதாக தொடர்ந்து கூறும்மாறு’ மிரட்டப்பட்டுள்ளார்.

இச்சூழலில் ஆட்சி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்ததாக கருதப்பட்டது. இச்செய்தி ஜனாதிபதியான எரோடகனை அடைந்தபோது அவர் கைப்பேசி மூலமாக உத்தரவுகளை பிறபித்துள்ளார்.

‘ஆட்சி ராணுவத்தின் கீழ் செல்லவில்லை. தேச துரோகிகளை தடுத்து நிறுத்துங்கள்’ என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து ஜனாதிபதி ஆதரவு படைகள் மற்றும் பொதுமக்கள் ராணுவ கலகக்காரர்களை எதிர்த்து சாலைகளில் குவிந்துள்ளனர்.

நள்ளிரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி இதுவரை 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 3,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சியை கைப்பற்றும் இச்செயலை தேச துரோகம் என ஜனாதிபதி எரோடகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், துருக்கி நாட்டில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் #Idamistiyorum(மரண தண்டனை சட்டம் வேண்டும்) என்ற ஹேஸ்டேக் பரபரப்பாக பகிரப்பட்டது.

நாடு முழுவதும் சுமார் 23,000 பேர் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர். துருக்கியில் மரண தண்டனை சட்டம் நடைமுறையில் இருந்து பின்னர் அச்சட்டம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது ஜனநாயகத்திற்கு விரோதமாக ராணுவ சதி நிகழ்ந்திருப்பதால், மரண தண்டனை சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆளும் கட்சியின் துணை தலைவரான Mehmet Muezzinoglu என்பவர் இந்த கோரிக்கையை ஆதரித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, ‘மரண தண்டனை சட்டத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டால், தற்போது ராணுவ சதியில் ஈடுப்பட்டவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: