பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்புகள்!

Monday, May 29th, 2017

இராணுவ வீரர்கள், மூன்று பெண்கள் வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முடியுமென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டுடெர்டே கூறிய சர்ச்சையான கருத்து, சர்வதேச அளவில் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் தென்பகுதி முழுவதும் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்திய பிறகு, இராணுவ முகாம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இழிவான கருத்தால் கடும் அதிருப்தியடைந்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஜனாதிபதி ரொட்றிகோவுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பபகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனாதிபதியின் பேச்சு இழிவானது, இராணுச் சட்டத்தை அமுல்படுத்தும்போது இராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடலாம் என்று அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

ரொட்றிகோ அரசாங்கம், மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி, அதை ஊக்குவிக்கவும் செய்யும் என்ற மனித உரிமைகள் அமைப்புக்களின் அச்சம் இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.அதேபோல், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மகளான செல்ஸீ கிளிண்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “டுடெர்டெ ஒரு கொலைகார முரடன். அவருக்கு மனித உரிமை மீது எப்போதும் மரியாதை இல்லை. பாலியல் துஷ்பிரயோகம் எப்போதும் கேலிக்குரிய விடயம் அல்ல” என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அந்நாட்டின் பெண்களுக்காக உள்ள ஓர் அரசியல் கட்சியான கேப்ரிலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் துஷ்பிரயோகம் என்பது நகைச்சுவை அல்ல என்றும், இராணுவச் சட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் அத்துமீறல்களும் நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

Related posts: