உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைவு – அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை!

Thursday, September 29th, 2022

உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது.

கடந்த 7 மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி பல்வேறு உக்ரைன் நகரங்களை ஆக்கிரமித்துள்ளது. மேலும், பல நகரங்களை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தொடர்ந்தும் சண்டையிட்டு வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷ்யா அங்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பானது ரஷ்யாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள் வெளியாகும் என மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன. அதன்படியே இந்த பொதுவாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் 93% பேரும், கெர்சன் பிராந்தியத்தில் 87% பேரும், லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பிராந்தியங்களில் முறையே 99% மற்றும் 98% பேரும் ரஷ்யாவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளதாக ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

அதைதொடர்ந்து உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புடின் நாளை (30) வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: