ஊடகவியலாளர் இருவருக்கு 7 வருட சிறை!

Tuesday, September 4th, 2018

ரொஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ‘ரொயிட்டர்’ செய்தி ஸ்தாபனத்தின் இரு ஊடகவியலாளர்களுக்கு தலா 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச ரகசியங்களை வெளிப்படுத்தும் செயலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் இவர்களிடம் இருந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் காவல்துறையினராலேயே இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டதாக தண்டனை விதிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 10 ரொஹிங்கிய சிறுபான்மையர்கள் மியன்மார் இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, அந்த ஆவணங்கள் இரு காவல்துறையினரால் விருந்தகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

திட்டமிட்டு ஆவணங்களை கையளித்ததன் பின்னர் பாதுகாப்பு தரப்பினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த வருடம் ரொஹிங்கிய போராளிகள் சில காவல்துறை நிலையங்களை தாக்கினர்.

அதற்கு பழிவாங்கும் நோக்கில், இராணுவம் சில கிராமங்களை முற்றாக அழித்ததுடன், வயது வித்தியாசம் இன்றி கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டனர். இந்த வன்செயல் காரணமாக குறைந்தது 7 லட்சம் மக்கள் இடம்பெயா்ந்தனர். பெரும்பான்மையானவர்கள் எல்லை கடந்து பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக தமது தீவிர கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட இராணுவ அதிகாரிகள் இன அழிப்பில் ஈடுபட்டமை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: