மறு தேர்தல் வேண்டும்: பாகிஸ்தானில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

Saturday, July 28th, 2018

பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன; எனவே, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, ஜமியாத் உலேமி-ஏ-இஸ்லாம் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகள் அனைத்தும் இக்கூட்டத்தில் பங்கேற்றன. பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாஹிடா மஜ்லிஸ்-ஏ-அமல் கட்சி ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் ஷெபாஸ் ஷெரீஃப், ஜமியாத் உலேமி-ஏ-இஸ்லாம் கட்சி தலைவர் மெளலானா ஃபஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது –

இம்ரான் கட்சி இத்தேர்தலில் முறைப்படி வெற்றி பெறவில்லை. அக்கட்சியை வெற்றி பெறச் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும். இல்லை என்றால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு மக்கள் தீர்ப்பு திருடப்பட்டுள்ளது என்றனர்.

மறு தேர்தல் நடத்தாவிட்டால், எம்.பி.க்களாக பொறுப்பு ஏற்காமல் புறக்கணிக்கலாம் என்பது குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், நவாஸ் கட்சி அதனை உடனடியாக ஏற்க மறுத்ததால் அந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

Related posts: