உக்ரெய்ன், ரஷ்யாவை சமரசத்திற்கு அழைக்கிறது துருக்கி!

Wednesday, November 28th, 2018

ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான மோதலை தீர்த்துக்கொள்வதற்கு இரு நாட்டு தலைவர்களுக்கும் துருக்கி அழைப்பு விடுத்துள்ளது.

இரு நாடுகளும் மோதல்களைத் தவிர்த்து ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என துருக்கி ஜனாதிபதி ரசப் தாயிப் ஏர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் நாடுகளுக்கு இடையில் உள்ள கிரிமியா பிரதேசம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதிகள் குறித்த பிரச்சினைகள் நிலவிவந்தன.

இந்த நிலையில், கிரிமியாவை அண்டிய கடற்பிரதேசத்தில் கெர்ச் நீரிணையில் ரோந்துபணியில் ஈடுபட்ட உக்ரெய்னுக்கு சொந்தமான கடற்படை கப்பல்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதுடன், கப்பல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கெர்ச் நீரிணையில் ரஷ்ய படைகள் பாரிய யுத்த உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறு புறத்தில் உக்ரெய்னில் அவசர காலம் பிரகடனம் செய்யப்பட்டு, இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

எனினும், நாட்டின் பாதுகாப்பை வலிமைப்படுத்தும் நோக்கிலேயே தாங்கள் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியதாக உக்ரெய்ன் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Related posts: