இந்தோனேஷியாவில் சுனாமி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு

Sunday, December 23rd, 2018

இந்தோனேஷியாவில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு சுமத்ராவில் இருந்து மேற்கு ஜாவா தீவுப் பகுதிகள் வரையிலான கடல் பகுதியில் இந்தோனேஷியாவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. இதனால் தற்போது வரை 222 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரது நிலை குறித்து தெரியவில்லை என தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சுனாமி தாக்குதலால் பல கட்டடங்கள், குடியிருப்புகள், படகுகள் உள்ளிட்டவை நாசமடைந்தன.

அனக் க்ரகடோவா எனும் புகழ்பெற்ற ஆழ்கடல் எரிமலை சீற்றம் மற்றும் 7.5 ரிக்டேர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஆகியவை இந்த சுனாமி ஏற்பட காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக, 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் சுமார் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: