இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை தொடர்பிலான மனு இன்று விசாரணை!

Monday, August 1st, 2016

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (01) நடைபெறவுள்ளது.

கடந்த 28ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையை பெறலாமே தவிர, அனுமதிபெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 பேரை விடுவிக்கும் முன், மத்திய அரசின் அனுமதியை மாநில அரசு பெற வேண்டும் என்ற அரசியல் சாசன அமர்வின் உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்  அரசியல் சாசன அமர்வு, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: