ஆண்டுக்கு 1 டொலர் ஊதியம் : விடுமுறை தேவையில்லை –ட்ரம்ப் அறிவிப்பு!
 Tuesday, November 15th, 2016
        
                    Tuesday, November 15th, 2016
            
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக்கான ஆண்டு ஊதியமாக 1 டொலர் மட்டுமே பெற்றுக்கொள்வேன் எனவும் பதவிக் காலத்தின் போது விடுமுறை எடுக்கப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதில் தனக்கு விருப்பமில்லை எனவும் ஊதியம் எவ்வளவு என்று கூட தனக்குத் தெரியாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்படி 1 டொலராவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால், வருட ஊதியமாக 1 டொலரை மட்டும் பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாகக் கூறியுள்ளார். நாட்டில் ஏராளமான பணிகள் காத்துக்கிடக்கின்றன. வரிகள் குறைக்கப்பட வேண்டியுள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருதல் உட்பட சுகாதாரத்துறையில் ஏராளமான வேலைகள் உள்ளன. விடுமுறை எடுத்துக்கொள்வதால் பணிகள் முடங்கிப் போகும். ஆகையால் விடுமுறை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க அதிபருக்கு மாதச் சம்பளம், பயணம், கேளிக்கை உள்ளிட்ட வகைகளில் மொத்த ஆண்டு ஊதியம் சுமார் 5.69 இலட்சம் டொலர்களாகும். இதில் சிலவற்றிற்கு வரி உண்டு. அமெரிக்க தேசத்தந்தை எனப் போற்றப்படும் ஜோர்ஜ் வாஷிங்டன், அந்நாட்டின் முதல் அதிபராகத் தேர்வானதும் தான் ஊதியம் பெறப்போவதில்லை என்று அறிவித்தார்.
அந்த சமயத்தில் அவருக்குப் போதிய வருவாய் இல்லாதபோதிலும், தேச சேவைக்கு ஊதியம் பெறக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், ஊதியத்தை ஏற்க மறுத்தார். எனினும், செல்வந்தர்களாக உள்ளவர்கள் மட்டும் ஊதியம் பெறாமல் உயர் பதவி வகிக்க முடியும் என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடையே ஏற்படக்கூடும் என்பதால், பாராளுமன்றத் தீர்மானத்தின்படி, ஆண்டுக்கு 25,000 டொலர் ஊதியத்தை அவர் ஏற்றார்.தற்போதைய ஊதியத் தொகை 2001 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        